பதிவு செய்த நாள்
17
மார்
2017
11:03
திருத்தணி: நாகாலம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதில், பெண்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில், நாகாலம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 52 கலசங்கள் அமைத்து, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் சரத்வ அர்ச்சனை, பூர்ணாஹூதி நடந்தது. காலை, 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் நாகாலம்மனுக்கு கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளுக்கு பின், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். விழாவில் திருத்தணி, தலையாறிதாங்கல, தாடூர், இ.என்.கண்டிகை உட்பட அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.