பதிவு செய்த நாள்
02
நவ
2011
11:11
கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் (அக்.31) நடந்தது. இதையடுத்து நேற்று (நவ.1) சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து சண்முகர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து மூலவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும் மணக்கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு எழுந்தருளினர். இதையடுத்து திருக்கல்யாண வைபோகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஏறி திருவீதிஉலா வந்தார். சிறப்பு பூஜைகளை செண்பகராமன், சங்கரன், கோபாலகிருஷ்ணன், சுவாமிநாதன் ஆகிய பட்டர்கள் செய்தனர். விழாவில் மண்டகப்படிதாரர் ஆயிர வைசிய காசுக்கார செட்டியார் சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் ராஜசேகரன், பொருளாளர் சங்கரன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வீரராஜன் செய்திருந்தார். இதேபோல் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயிலில் நடந்த கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று (நவ.1) திருக்கல்யாண வைபோகம் நடந்தது.