பதிவு செய்த நாள்
04
நவ
2011
10:11
குளித்தலை: "கிடப்பில் போடப்பட்டுள்ள அய்யர்மலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் 1,117 படிகள் கொண்டது. இக்கோவில் சித்திரை மாதம் தேரோட்டம், கார்த்திகை மாதம் திங்கள் தோறும் சோமவாரம் நிகழ்ச்சி, தைப்பூச திருவிழாவில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி, பவுர்ணமி தோறும் கிரிவலம் மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அய்யர்மலை மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலங்களில் ஒன்றாகும். அய்யர்மலைக்கு ரோப்கார் அமைக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்ததால் கடந்த தி.மு.க., ஆட்சியில் ரோப்கார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ரோப்கார் அமைக்க பொதுமக்களின் பங்களிப்பாக 2 கோடியே 32 லட்சம் ரூபாயும் அரசுக்கு செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரோப் கார் அமைக்கும் பணி ஃபிப்ரவரி 2 ம் தேதி அப்போதைய தி.மு.க., அரசு அடிக்கல் நாட்டு விழா நடத்தியது. விழாவில் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கியதால் ரோப் கார் அமைப்பதற்கான எவ்விதமான பணியும் கடந்த தி.மு.க., ஆட்சியில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். குளித்தலை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வை சேர்ந்த பாப்பா சுந்தரம் வெற்றி பெற்றார். சத்தியமங்கலம் பஞ்சாயத்தில் அ.தி.மு.க., சார்பில் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து முத்துசாமியும், அவருடைய மகன் பிச்சை என்பவரும் பஞ்சாயத்து தலைவராக நான்கு முறை இருந்து வருகின்றனர்.எனவே, சத்தியமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள அய்யர்மலை கோவிலில் கிடப்பில் போடப்பட்ட ரோப்கார் பணியை மீண்டும் தொடர தமிழக முதல்வர் ஜெயலலிதா, குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம், பஞ்சாயத்து தலைவர் பிச்சை ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.