ஆத்தூர் : ஆத்தூர் சுற்றுப்பகுதியில் ஆத்மாக்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் ஆத்மாக்கள் திருவிழா எனப்படும் கல்லறை திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் (2ம் தேதி) காலை பங்குத்தந்தை மரியஅரசு திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் கல்லறை மந்திரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. புன்னக்காயல் புனித சவேரியார் ஆலயத்தில் மாலையில் பங்குத்தந்தை ஜான்செல்வம், துணைத் தந்தையர்கள் அலாய், ராஜன் ஆகியோர் ஆத்மாக்கள் திருவிழா சிறப்புத் திருப்பலியை நடத்தினர். அதன்பின் கல்லறை மந்திரிக்கப்பட்டது. சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திலும் ஆத்மாக்கள் திருவிழா திருப்பலியும், கல்லறை மந்திரிப்பும் நடந்தன. தங்கள் குடும்பத்தில் இறந்துபோனவர்களின் ஆத்ம சாந்திக்காக நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு உறவினர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி, ஊதுவத்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.