பதிவு செய்த நாள்
08
நவ
2011
10:11
பத்தனம்திட்டா : அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, மண்டல, மகர ஜோதி உற்சவ காலங்களில் அய்யப்பன் கோவில் நடை கூடுதல் நேரம் திறக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி மண்டல கால பூஜையும், தொடர்ந்து மகரஜோதி உற்சவமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கோவிலில் தற்போது நடை திறந்திருக்கும் நேரத்தை விட, அதிக நேரம் திறக்கவேண்டும் என, பக்தர்கள் கோரி வந்தனர். இதையடுத்து பக்தர்கள் சபரிமலைக்கு வந்தடையும் தினத்திலேயே, தரிசனம் முடிந்து திரும்ப வசதியாக கூடுதல் நேரம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அதிகாலை மூன்று மணிக்கு திறக்கப்படும் நடை, உச்சிக்கால பூஜைக்கு பின் மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்படும். பின்னர், பிற்பகல் மூன்று மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11.45 மணிக்கு அடைக்கப்படும். மண்டல பூஜைக்காக, சபரிமலை கோவில் நடை வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் என, சபரிமலை சீசன் களைகட்டத் துவங்கி விடும். அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை விற்பனை செய்வதற்காக, தற்போதுள்ள 12 கவுன்டர்களை விட, சன்னிதானம் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோவில் அருகே புதியதாக ஆறு கவுன்டர்கள் துவக்கப்படும். சபரிமலை சன்னிதான பகுதியில், ராணுவத்தினரால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுள்ள பெய்லி பாலம் (நடை பாலம்) மூலம், பக்தர்கள் தரிசனம் முடிந்து விரைவாக வெளியேற வசதி ஏற்படுத்தப்படும்.