பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜையை தொடர்ந்து அன்னதானத்திற்கும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்திருப்பது பக்தர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியன்று கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு, பக்தர்கள் தயாரான போது கோவில் நிர்வாகம் நடத்தக்கூடாது என தெரிவித்தது. வேறு இடத்தில் நடத்திக் கொள்ள பக்தர்கள் சம்மதம் தெரிவித்தனர். அன்றைய தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது தடை விதித்துள்ளனர். இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை சார்பில், கோவில் செயல் அலுவலர் மாலாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 23 ஆண்டுகளாக சித்திரை பவுர்ணமியன்று, பக்தர்கள் பால்குட ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, இரவில் திருவிளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இம்முறை திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி மறுத்து விட்டீர்கள். இது பக்தர்களுக்கு மனவேதனை அளிக்கிறது. தற்போது அன்னதானம் வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளீர். அன்னதானம் வழங்க அனுமதி தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.