பதிவு செய்த நாள்
10
நவ
2011
11:11
சேலம்: சேலம் ராஜகணபதி கோவில் உண்டியல் வருவாய், கடந்த முறையை விட நேற்று எண்ணப்பட்ட போது, 1.65 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. சேலம் ராஜகணபதி கோவிலின் உண்டியல் என்னும் பணி நேற்று சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷ்னர் வரதராஜன், கோவிலின் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், ஆய்வாளர் தமிழரசு, கண்காணிப்பாளர் உமாதேவி, தலைமை எழுத்தர்கள் வன்னியர்திலகம், மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ராஜகணபதி கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் பெட்டிகளில் பணம் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் இடத்துக்கு எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து பணம், சில்லரை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்த பணியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஊழியர்கள், சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்கள், கோவில் ஊழியர்கள், 20க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் நேற்று எண்ணப்பட்டதில் பணமாக, 9 லட்சத்து, 58 ஆயிரத்து, 492 ரூபாய், தங்கம், 1.900 கிராம், வெள்ளி, 169 கிராம், ஒரு அமெரிக்க டாலர் ஆகியன இருந்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது, 7 லட்சத்து, 92 ஆயிரத்து, 549 ரூபாய் இருந்தது. கடந்த முறையை விட தற்போது கோவில் உண்டியல் வருவாயில், 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 943 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது. இம்முறை தங்கத்தால் செய்யப்பட்ட பெண்களின் தாலிக் கொடி, வெள்ளியால் செய்யப்பட்ட பல்வேறு உடல் உறுப்புகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. கடந்த முறையை விட தற்போது கோவிலின் உண்டியல் அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ளதால் அடுத்த முறை உண்டியல் எண்ணப்படும் வருவாய் மேலும் உயர வாய்ப்புள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.