பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
03:06
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மழை வேண்டி வருண யாக பூஜை நடந்தது. ராசிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சமீபத்தில் மழை பெய்ததால் ஆர்வமடைந்த விவசாயிகள் கடலை, சோளம் போன்றவற்றை அதிகளவில் நடவு செய்தனர். தற்போது, ஒரு வாரமாக மழையின்மையால் பயிர்கள் வாடி வருகின்றன. மனம் நொந்த விவசாயிகள், மழை வேண்டி வருண பகவானை பூஜித்து வருகின்றனர். ராசிபுரம் அடுத்த, முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை, 10:00 மணியளவில் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து நடை பயணமாக ராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரைக்கு, 10:30 மணிக்கு வந்தடைந்தனர். வருண பூஜைக்காக, ஏரிக்கரையில் கீற்று கொட்டகை, யாககுண்டம் அமைக்கப்பட்டது. மதியம், 2:00 மணியளவில் யாககுண்டத்தை ஐந்து சிவாச்சாரியார்கள் பற்ற வைத்தனர். தொடர்ந்து, மந்திரங்கள் முழுங்க வருணபகவானுக்கு யாகமும், இதையடுத்து, தண்ணீர் பாத்திரத்தில் அமர்ந்து சிவாச்சாரியார்கள் வருண ஜெபமும் செய்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.