கார்த்திகை முதல் நாளில் சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2011 11:11
சபரிமலை: கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை சபரிமலை நடை திறந்த போது, சன்னிதானத்திலும் சுற்றுப்புறங் களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை நவ., 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் நடத்திய சசி நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. கார்த்தியை 1ம் தேதி (நேற்று) அதிகாலை மூன்று மணிக்கு புதிய மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடை திறந்த போது சன்னிதானத்தில் கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷமிட்டனர். தொடந்து கோயிலினுள் தீபம் ஏற்றிய மேல்சாந்தி விநாயகர் கோயிலில் பூஜைகள் நடத்திய பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மண்டல காலத்துக்கான நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின், ஸ்ரீகோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு உஷபூஜை நடந்தது. 12 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. காலையில் நடை திறக்கப்பட்ட போது பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை இருந்தது. சன்னிதானத்தில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் இல்லாததால் பக்தர்கள் தண்ணீர் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். அன்னதானமும் பெரிய அளவில் நடைபெறவில்லை.