உழைப்புக்கு உதாரணம் என்றால் அது எறும்பு தான். மழை, வெயில் எதையும் அது பொருட்படுத்துவதில்லை. அணு அணுவாய் பொருள் சேர்ப்பதில் எறும்புக்கு நிகர் ஏதுமில்லை. சிறிய உருவமுள்ளதாயினும், உழைப்பின் மீது அது நம்பிக்கை வைத்திருக்கிறது. அதனால் தான் பைபிளில் சோம்பேறிகளே! எறும்பைப் பாருங்கள். அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள், என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனிதனுக்கே ஞானம் தரும் அளவுக்கு எறும்பின் செயல்பாடு அமைந்துள்ளது. அது ஒரு உணவை எடுத்துச் செல்லும் போது, தெரிந்தோ தெரியாமலோ யாராவது தட்டி விட்டாலும் கூட மீண்டும் வந்து எடுத்துச் செல்கிறது. பொருள் சற்று கனமானதாக இருந்தால், பல எறும்புகள் ஒற்றுமையாக அதை இழுத்துச் செல்கின்றன. ஒற்றுமையையும், உழைப்பையும் எறும்புகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறது பைபிள்.