பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
11:07
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம், அஷ்ட லஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. கால பைரவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி கால பைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் யாக பூஜை நடந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்றனர். சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சையில் பக்தர்கள் தீபம் ஏற்றி, காலபைரவருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று காலபைரவர் மூலஸ்தானம், ஒரு லட்சத்து, 108 ருத்ராட்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.