திருவாடானை:தீர்த்தாண்டதானம் கடலில் நடை மேடை அமைக்க வேண்டும். தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சர்வதீர்த்தேஸ்வரர் கோயில் உள்ளது. ராமபிரான் இவ் வழியே சீதையை தேடி இலங்கை சென்ற போது, இங்கு ஓய்வெடுத்தார். அப்போது தாகம் எடுக்கவே, அகத்தியர், தீர்த்தம் ஏற்படுத்தி கொடுத்ததால், சர்வதீர்த்தேஸ்வரர் என பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் அதிகமான கூட்டம் காணப்படும். இது தவிர இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் கடலில் நீராடி பூஜை செய்வர். இங்குள்ள கடலுக்குள் செடிகள் மண்டிகிடப்பதால், பொதுமக்கள் நீராட முடியாமல் தவிக்கின்றனர்.
தீர்த்தாண்டதானத்தை சேர்ந்த ரெத்தினம் கூறியதாவது- இங்குள்ள கடல் மிகவும் புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. கடலில் இறங்கும் போது, பாசி செடிகளால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கபடுகின்றனர். ஆகவே தேவிபட்டினத்தில் அமைக்கபட்டிருப்பது போல் பக்தர்கள் கடலில் சிறிது தூரம் சென்று நீராடும் வகையில் நடைமேடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.