ஒரு பணக்கார உறவினரிடம், சக உறவினர்கள் உதவி கேட்டு வந்தனர். ஆண்டவர் ஏராளமாக தந்திருந்ததால் அவர்களும் தங்களால் முடிந்ததை கொடுத்தனர். அடுத்து ஏழை நண்பர்கள் வந்தனர். ஆலயத்திற்கு, அனாதை விடுதிகளுக்கு நன்கொடை கேட்டு சிலர் வந்தனர். எல்லாருக்கும் சளைக்காமல் அந்த பணக்கார குடும்பம் உதவியது. கொஞ்ச காலம் சென்றது. இங்கு போனால் உதவி கிடைக்கும் என நினைத்து, சம்பந்தமில்லாத பலரும் நேரம், காலம் தெரியாமல் குவிய ஆரம்பித்து விட்டனர். இது அந்த குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் வந்தவர்கள் மீது கோபப்பட்டு திருப்பி அனுப்பி விட்டனர்.
ஒருநாள், அவ்வீட்டு தலைவி ஜெபம் செய்து கொண்டிருந்தார். மெதுவான குரலில் தேவன் பேசுவது போல் கேட்டது. மகளே! பட்டுப் போன மரத்தை தேடி பறவைகள் செல்வதில்லை. காய்த்த மரங்களைத் தானே அவை நாடும். உன்னைக் கனி தரும் மரமாய் வைத்திருக்கிறேன். நீ மிகுதியான கனி கொடுப்பாயானால், இன்னும் உன்னை ஆசிர்வதிக்க காத்திருக்கிறேன் என்றது அக்குரல். இது அந்த பெண்மணியை சிந்திக்க வைத்தது. கண்ணீர் வடித்து தன் தவறுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். அக்குடும்பத்தினர் மீண்டும் தானம் செய்ய துவங்கினர். நீங்கள் எப்போதும் கனி தரும் செடியாய் இருங்கள். வருமானத்தின் ஒரு பகுதியை பகிர்ந்து கொடுங்கள். நியாயமான உதவி கேட்டு வருபவர்களிடம் எரிச்சல் படாதீர்கள்.