வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசகஸ்ர நாமம், பஜகோவிந்தம், வெங்கடேஸ்வர பஞ்சரத்னமாலா போன்ற எம்.எஸ்., பாடிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.கவுசல்யா சுப்ரஜா என்று தொடங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தை அதிகாலையில் கேட்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வீகம் கமழும். திருப்பதியில் எம்.எஸ்., பாடிய சுப்ரபாதத்தைக் கேட்டுக்கொண்டே சீனிவாசப் பெருமாள் துயில் எழுகிறார். விழித்துக் கொண்டேயிருக்கும் மதுரையில் பிறந்ததாலோ என்னவோ, எம்.எஸ்., திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி யைத் தமிழிலும் பாடினார். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விஸ்வநாதர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆகியோர் மீதும் சுப்ரபாதம் பாடியுள்ளார். இவர் பாடிய குறையொன்றுமில்லை பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. இந்தப் பாடலை எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி. திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்ஸுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் வெண்கலச்சிலை ஒன்றை திருப்பதியில் நிறுவியுள்ளது.