புத்திசாலியான மந்திரி ஒருவர், ராஜாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதற்குரிய தீர்வைத் தெளிவாகச் சொல்லி விடுவார். இதனால் ராஜாவுக்கு மந்திரி மேல் பிரியம் அதிகம். அந்த மந்திரிக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் ஒரு விவசாயி. தன் மந்திரி அண்ணன் உழைப்பே இல்லாமல் நிறைய சம்பாதிக்கிறானே என்று தம்பிக்கு பொறாமை. ஒருநாள் அண்ணனிடம், “நீ கொஞ்சநாள் விவசாயத்தைப் பார். எனக்கு மந்திரி பதவி வாங்கிக்கொடு, என்றான். மந்திரியும் ராஜாவிடம் சிபாரிசு செய்து தம்பியை மந்திரியாக்கி விட்டார். ஒருநாள் சாலையில் சில வண்டிகள் சென்றன. எத்தனை வண்டி போகிறது? என ராஜா பார்த்து வரச்சொன்னார். இவர் போய் பார்த்து விட்டு, “பத்து வண்டி போகிறது, என்றார். வண்டியில் என்ன இருக்கிறது? என்றார்.
இதை புது மந்திரி கவனிக்கவில்லை. மீண்டும் ஓடிப்போய் பார்த்து வந்து நெல் மூடை போகிறது என்றார். அது என்ன விலை? என்று ராஜா கேட்க, புது மந்திரி திரும்பவும் ஓடிச் சென்று பதில் வாங்கி வந்தார். இப்படி பல கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்போது பழைய மந்திரி தற்செயலாக வந்தார். ராஜா அவரிடம், நீங்கள் வரும் வழியில் வண்டிகளைப் பார்த்தீர்களா? என்றார் “ஆம் ராஜா! பத்து வண்டிகள் நம் அரண்மனையைக் கடந்தன. அதில் 200 மூடை நெல் பாண்டிய நாட்டுக்குப் போகிறது. நம் சோழ நாட்டில் மூடைக்கு ஐந்து ரூபாய். அங்கே ஏழு ரூபாய் என்பதால் லாபம் கருதி அங்கே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள், என தெளிவாகச் சொன்னார். தம்பி மந்திரி தலை குனிந்தார்.
நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பும் போதே ஆண்டவர், இவன் இன்ன விஷயத்துக்கு தகுதியானவர் என்று அனுப்புகிறார். இதை ஏற்று நாம் நாமாக இருந்தாலே போதும். “நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே, நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்கள் என்ற வசனப்படி, அவரவர் பணியை முழுமையாக செய்தாலே வாழ்வில் வெற்றி பெற்று விடலாம்.