பதிவு செய்த நாள்
09
டிச
2011
11:12
வண்டிப்பெரியாறு : சபரிமலைக்கு காட்டு வழியே நடந்து செல்லும் பக்தர்கள், இனிமேல், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பிரச்னையை பெரிதாக்கி, இரு மாநிலத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியது கேரள அரசு. பிரச்னை காரணமாக, தேனி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில், சில தினங்களாக பதட்டம் நீடிக்கிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், இடுக்கி பகுதியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும், அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
புதிய கட்டுப்பாடு: நேற்று முன்தினம், பக்தர்கள் ஓய்வெடுக்கும் சத்திரம் பகுதியில், கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில், "சபரிமலைக்குச் செல்லும் காட்டு வழியில், யானைகள் அடிக்கடி புகுந்து, பக்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால், பக்தர்களிடமும், வியாபாரிகளிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, காட்டுப் பாதையில் இனிமேல், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். காட்டுப் பாதையில் போதுமான வெளிச்சம் இல்லை. இரவில் வன விலங்குகள் பக்தர்களை தாக்கக்கூடும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தடை நடவடிக்கை, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு, பெரிய பாதை வழியாக நடந்து செல்ல எண்ணும் பக்தர்களுக்கு, அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.