பதிவு செய்த நாள்
23
அக்
2017
12:10
சாயல்குடி: சாயல்குடி அருகே புராதன கோயிலான மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட இக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக உள்ளது. இது கடற்கரை அருகே உள்ளதால், ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்வார்கள். கோயில் பிரகாரத்தை சுற்றிலும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பரிகார ஸ்தலமாக விளங்குவதால், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் கட்டுமானங்கள் முற்றிலும் பாறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தெற்குப்பகுதியில் 10 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் உள்ளது.
வடக்கு, கிழக்கு, மேற்குப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு சுற்றுச்சுவர் சேதமடைந்தும், இடிபாடுகளுடன் உள்ளதால், பாதுகாப்பில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. கடலாடியை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில்,பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.சித்ரா பவுர்ணமியில் வலைவீசும் படலம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. மூன்று புறங்களிலும் சேதமடைந்த நிலையில் காம்பவுண்டு சுவர் உள்ளதால், ஆடு, மாடுகள் கோயிலுக்குள் தஞ்சமடைந்து விடுகிறது.இக்கோயிலில் சுற்றுச்சுவர் மீண்டும் எழுப்பிட இந்துசமய அறநிலையத்துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.