கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில், கடந்த 20ம் தேதி, கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு, ஆறுமுக சுவாமிவீதியுலாவும், காளி அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நான்காம் நாள் திருவிழாவான நேற்று காலை, மூலவருக்கு சகஸ்ரநாம பூஜைகளும், தீபாரதனையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து வீரவாகுத் தேவர்கள் வீதியுலாவும், கந்த புராண வாசிப்பு நிகழ்ச்சியும், தேவாரம், திருவாசகம் ஓதும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன், கவுரிசங்கர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.