பதிவு செய்த நாள்
24
அக்
2017
12:10
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்து வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசியர்கள் முத்தமிழ், பிரபு ஆகியோர், திருப்பத்தூர் அருகே, சல்லியூர் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால வீரமங்கையின் நடுகல்லை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சல்லியூரில் கண்டெடுக்கப்பட்ட நடுகல், வீரப்பெண்ணுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் காணப்படும் வீரமங்கை, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி உள்ளார். இடையில் கச்சையுடன் சிறிய கத்தியும் வைத்துள்ளார். போர் புரியும் போது அணியும் ஆடையை அணிந்துள்ளார். அவரது காலில் வீரக்கழல், கழுத்தில் ஆபரணம், காதில் வளையம், தலையில் நீண்ட கூந்தலை முடித்து பெரிய கொண்டை போட்டுள்ளார். இந்த சிற்பம், கல்லில் குடைத்து செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப வேலைப்பாடுகளை வைத்துப் பார்த்தால், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழன் காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. தம் பகுதியை மீட்கப் போர் புரிந்து, வீர மரணம் அடைந்த பெண்ணுக்காக, இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையரிடம் இருந்து தம் ஊரை காப்பாற்ற போராடி, வீர மரணம் அடைந்த பெண்ணின் நினைவாகவும், இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.