நாகத்துடன் கூடிய லிங்கத்தை நாகலிங்கம் என்பார்கள். அதாவது, மூன்று அல்லது ஐந்து சுருளாக, உடலைச் சுருட்டிக் கொண்டுள்ள பாம்பையே ஆசனமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் நாகலிங்க மூர்த்தத்தைத் தரிசித்து வழிபட்டால் வம்சம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. அனைத்து கோயில்களிலும் லிங்கத்தோடு சேர்த்து நாகத்தின் உருவத்தை அமைப்பது இல்லை. உலோகத்தால் செய்து நாக பாசமாக அணிவிப்பார்கள். சில திருத்தலங்களில் பிரகாரங்களில் நாகலிங்கத்துக்கான தனிச் சன்னிதி அமைந்திருக்கும். திருவோத்தூர் எனப்படும் திருவத்திபுரம் அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயிலில் தனிச் சன்னிதியில் நாகலிங்கம் அமைந்துள்ளது.