பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
வேலூர்: வேலூர் அருகே, விநாயகர் கோவிலில், 97 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அருகே சோழவரம் அடுத்த வடக்கு கொட்டாமேடு கிராமத்தில், விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த, 2007 ல், 97 கிலோ எடையுள்ள ஐம்பொன் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் பூசாரி சடையாண்டி, நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு, கோவிலை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்த போது, முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் இருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 96 கிலோ எடையுள்ள ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலையை திருடியவர்களை தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில், கடந்த, மூன்று மாதங்களில், 12 கோவில்களில் சுவாமி சிலைகள், உண்டியல் உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது. இதில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.