பதிவு செய்த நாள்
13
நவ
2017
01:11
கோவை : பஞ்ச துவாரகை யாத்திரைக்கு வரும், 15ம் தேதி இயக்கப்படவுள்ள ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.இந்தியன் ரயில்வே, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும்(ஐ.ஆர்.சி.டி.சி.,) இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.இந்நிலையில் வரும், 15ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை, நெல்லுார், விஜயவாடா வழியாக, பஞ்ச துவாரகை யாத்திரை செல்கிறது. யாத்திரையில் துவாரகா, பேட் துவாரகா, நாத் துவாரகா, காங்ரோலி துவாரகா, தாக்கோர் துவாரகா மற்றும் நஷ்கலங் மஹாதேவ்(கடல் கோவில்) தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து செல்பவர்கள், ஈரோடு சென்று புறப்படலாம். 10 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 9,450 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தும், இந்த கட்டணத்தில் அடங்கும். ஒவ்வொரு கோச்சுக்கும் தகுதிவாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.யாத்திரை விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655 என்ற மொபைல் போன் எண்ணிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும், தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.