பதிவு செய்த நாள்
13
நவ
2017
05:11
சிவபெருமான் திருக்கோலங்களில் பைரவரின் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்தி நான்கு விதம் என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமித் திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைராஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோயிலிலும், வட கிழக்குப் பகுதியில் தனிச் சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோயில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச் செயல்கள், செய்யும் காலங்களில் ஏற்கும் திரு உருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணங்கள் கூறுகின்றன. பைரவரின் திரு உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கியுள்ளன.
தலையில் மேஷ ராசியில், வாய்ப்பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும் மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும் புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப் பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் கூறுகின்றன. பைரவர் பாம்பைப் பூணூலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருகிறார். பைரவருக்கு இராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகக் கூறப்படுகிறது. ஞாயிறுக்கிழமை இராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து எள் கலந்த சாதமும், இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து, முன்னோர்களை நினைத்து, பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் செய்வது சிறப்பு.
பைரவரை வழிபட்டால் தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவரின் தொந்தரவு இருக்காது. யம பயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவன்கோயில்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும், அவரது அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.