படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவன்கோயில்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும். இந்த பைவர வழிபாடு திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை, சிலைகளாகவோ, படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில், திரிசூல வழி பாடாகப் போற்றப்படுகிறது. வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவன்கோயில்களிலும் வழிபாடு, சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தஜாமப் பூஜை முடிந்தவுடன் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து கோயிலின் கதவுகளை மூடி கோயில் சாவிக் கொத்தை பைரவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து, பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச் சொம்பை வைக்கின்றனர்.
கோயில்களில், நடைபெறும் வருடாந்திர பிரம்மோத்சவத்திற்கு முன்னும், பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பக்ஷணங்களும் எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டு வித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.