பதிவு செய்த நாள்
14
நவ
2017
12:11
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவின் போது, திருவண்ணாமலை மலை மீது ஏற விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும், என, தி.மு.க., மாஜி அமைச்சர் வேலு கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா, உலக அளவில் சிறப்பு பெற்றது. இந்த விழாவில், மலை ஏற, கலெக்டர் கந்தசாமி தடை விதித்துள்ளார். மலை மீது ஏறுவதால் உயிரிழப்பு, கூட்ட நெரிசலால் பாதுகாப்பு அளிக்கு முடியாத நிலை, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிக்கல் என காரணம் கூறியுள்ளார். மக்களின் பண்பாட்டு வழக்கில், அரசின் தலையீடு இருக்க கூடாது. மலை ஏறுவதை தடுக்க முயற்சிப்பதில், அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. பேரிடர் நிறைந்த மலைப்பகுதியான அமர்நாத் பனிலிங்கத்தை காண செல்லும் பக்தர்களுக்கு, அரசின், மூன்றடுக்கு பாதுகாப்பு, முப்படை பாதுகாப்பு அளிக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில், பக்தர்கள் மலையேற தடை விதிப்பது சரியல்ல. இதற்கு குழு அமைத்து பிரச்னைகளை தீர்க்கலாம். மலை ஏற தடை நீக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அன்னதானம் அளிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பது, கேலி கூத்தாக உள்ளது. கண்காணிப்பு குழு அமைத்து, தரமான உணவும், தக்க பாதுகாப்பும் அளிக்கலாம். கிரிவலப்பாதையில் உள்ள புண்ணிய தீர்த்த குளங்களில், போலீஸ் பாதுகாப்புடன், பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.