பதிவு செய்த நாள்
14
நவ
2017
06:11
அரக்கோணம்: சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு பணிக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர், 44 பேர் சென்றுள்ளனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு வரும், 17 ல் நடக்கிறது. அன்று முதல் மகரஜோதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, வேலுார் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து, துணை கமாண்டன்ட் விஜயன் தலைமையில், 44 வீரர்கள், ரயில் மூலம் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலைக்கு செல்லும் வீரர்கள், மகரஜோதி வரை அங்கேயே தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணி செய்ய, 30 வீரர்கள் வரும், 28 ல் அங்கு செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.