பதிவு செய்த நாள்
16
நவ
2017
01:11
திருப்பூர் : ஊதியூர், உத்தண்டவேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான நில விற்பனை, பதிவு, தடையின்மை சான்று, தனியார் நிறுவனம் கட்டுமானம் ஆகியன குறித்து, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊதியூரில், பழமையான உத்தண்ட வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. கோவில் பூஜை, விழாக்கள் நடத்த ஏதுவாக, 1,581 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள, இக்கோவில் நிலங்களை மீட்பதில், அறநிலையத்துறை அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இந்நிலையில், நூறு ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து, குன்றுக்கு அருகில், 21.25 ஏக்கர் நிலத்தில், தனியார் நிறுவனம் ஒன்று, பால் பண்ணைக்கு கட்டடம் கட்டி வந்தது. இதையறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டுமானத்துக்கு தடை விதித்ததோடு, கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று, அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.
அரசு துறை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பால், கோவில் நிலம், முறைகேடாக விற்கப்பட்டுள்ளது, பக்தர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊதியூர் கிராம ஆவணம் முதல், வருவாய்த்துறை, பதிவு துறை ஆவணங்களில், கோவிலுக்கு சொந்தமான நிலம் என்றே உள்ளது. அறநிலையத்துறை சார்பில், கோவில் நிலங்களின் சர்வே எண்களை குறிப்பிட்டு, பதிவு செய்யக்கூடாது என்று, ஏற்கெனவே அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு துறை அலுவலகத்தில் இந்நிலங்கள், ‘ஜீரோ வேல்யூ’ என்று குறிப்பிட்டு, சர்வே எண்களுக்கு, சிவப்பு குறி இடப்பட்டுள்ளது. அதையும் மீறி, பதிவு துறை அலுவலகத்தில், வேறொரு நபர் விற்பதாகவும், சம்மந்தப்பட்ட நிறுவனம் வாங்கியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்வதற்கு முன்னரே, கட்டுமான பணிகள் துவங்கி, எட்டு மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. மேலும், வருவாய்த்துறையினர், ஆவணங்களை முறைகேடாக பெயர் மாற்றியது, சம்பந்தமே இல்லாமல், நிலம் பதிவு செய்ய தடையின்மை சான்று வழங்கியது உள்ளிட்டவையும், பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பல ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டுமானம் உருவாகி வந்த நிலையில், முன்பு பணியாற்றிய கோவில் அதிகாரிகளுக்கு தெரியாமல், இது நடந்துள்ளதா; மின் இணைப்பு எவ்வாறு பெறப்பட்டது; வங்கி கடன் பெற்றது என, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, பக்தர்கள் குமுறுகின்றனர். உத்தண்ட வேலாயுத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 1,581 ஏக்கர் நிலத்தின், தற்போதைய நிலை; சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களுக்கு, 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களின் தற்போதைய நிலையும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உரிய செயல்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.