சபரிமலை எல்லா மதங்களுக்கும் பொதுவான கோயில். இங்கு இன, மத, மொழி பாகுபாடின்றி அனைவரும் பக்தியோடு வந்து ஐயப்பனைத் தொழ முடியும். ஐயப்பனுக்கு பூர்ணா, புஷ்கலா என்ற இரண்டு மனைவிகள் உண்டு. மேலும் பிரபை என்ற மனைவியும் சத்யகன் என்ற பிள்ளையும் உண்டு. சபரிமலையில் ஐயப்பன் பிரம்மசாரிக் கோலம் கொண்டு தவம் செய்து கொண்டு இருக்கிறார். மலையில் மேல்சாந்தி, தந்திரி என்பவர்களே பூசை உட்பட அனைத்து அதிகாரங்களும் உள்ளவர்கள். தந்திரியே எல்லா பூசைகளையும் முன்னின்று நடத்துவார். சுருங்கச் சொன்னால் மேல்சாந்தி ஜனாதிபதி போலவும், தந்திரி பிரதமர் போலவும் உள்ளவர்கள். தந்திரிகள் ஒரே குடும்பத்தில் இருந்து வருகிறார்கள். ஐயப்பனை வளர்த்த பந்தள மன்னர் ராஜசேகரனின் குடும்பத்து மக்கள், தங்கள் வீட்டுக் குழந்தையாக ஐயப்பனை காணவருகிறார்கள்.
ராஜ குடும்பத்து ஆபரணங்கள் ஐயப்பனுக்காக வருடம் ஒருமுறை பந்தள அரண்மனையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்கு சூட்டி அழகு செய்யும் நாளே மகர ஜோதி தெரியும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் நாள்) திருநாள். மொத்தம் 3 சந்தனப் பெட்டிகளில் ஆபரணங்கள் வரும். அதில் ஒரு பெட்டி ஆபரணங்கள் மாளிகை புரத்து அம்மனுக்கானது. ஆபரணங்கள் அரண்மனையிலிருந்து கிளம்பியதும் ஒரு கருடன் காவலுக்கு வானில் வட்டமிட்டபடி ஊர்வலத்தைத் தொடர்ந்து வரும் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டதும் அந்த கருடன் சன்னிதானத்தை மூன்று முறை வட்டமிட்டுவிட்டு பறந்து போய்விடும். விலை உயர்ந்த அந்த ஆபரணங்கள் சன்னதியை அடைந்ததும் அவை ஒவ்வொன்றாக சரிபார்க்கப்பட்டு மேல் சாந்தியால் சான்றளிக்கப்படும். பின்னர் அவை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த மொத்த வேலைகளும் சுமார் 15 நிமிடங்களுக்குள் நடந்து விடும்.
சபரிமலையில் பிரம்மசாரியாக இருக்கும் ஐயப்பன், கேரளத்தின் பிரபலமான மற்ற ஐயப்ப தலங்களான குளத்துப் புழாவில் குழந்தையாகவும், ஆரியங்காவில் இளைஞனாகவும், அச்சன்கோயிலில் குடும்பஸ்தராகவும் வழிபடப்படுகிறார். சபரி மலையில் 12-ம் நூற்றாண்டில் கழுத்தில் துளசி மணி மாலை அணிந்து ஐயப்பன், மணிகண்டனாக தவமிருந்து தர்மசாஸ்தாவை வழிபட்டு தெய்வீகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்கிறது. அவ்வாறு ஐயப்பன் தவமிருந்த இடமே சபரிமலையிலுள்ள மணிமண்டபம். ஐயப்பன் குதிரையை வாகனமாக உடையவர். பந்தள ராணியின் தலைவி போக்க புலிகளின் மேல் ஊர்வலமாக வந்ததால் புலி வாகனர் என்று நினைப்போர் உண்டு. ஐயப்பன் கோயில்கள் எல்லாவற்றிலும் கொடி மரத்தின் மேல் குதிரை வாகனம் மட்டுமே காண முடியும். கிருத யுகத்தில் தர்மசாஸ்தாவாக அவதரித்தவரே கலியுகத்தில் ஐயப்பனாக வந்து பந்தளத்தில் வளர்ந்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களில் 10 வயதுக்குட்பட்டவர்களும், 50 வயதைக் கடந்தவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதை அமல்படுத்தி கேரள காவல்துறை சிறப்பாகச் செயல்படுகிறது. சபரி செல்லும் தகுதி உடைய பெண்கள் பிறந்த தேதிக்கான அரசு அடையாளச்சீட்டு கொண்டு செல்லுதல் நலம். தற்போது சபரிமலையில் வழிபாட்டில் இருக்கும் ஐயப்ப விக்ரகம் 1910 -ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரம் 1969 -ல் நிறுவப்பட்டது. கோயில் நிர்மாணிக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகள் வரை மக்களால் வர முடியாமல் இருந்தது. பிற்காலத்தில் ஒரு மன்னர் வாவரின் வாரிசுகளோடு வந்து எரிமேலியில் தங்கி சபரிமலை செல்லும் பாதையைக் கண்டுபிடித்து வழிபாடுகளுக்கு வகை செய்தாராம். மன்னரின் படைகள் தங்கள் ஆயுதங்களை விட்டு வைத்த இடமே சரங்குத்தியாக தற்போது போற்றப்படுகிறதாம். 1950 -ல் ஏற்பட்ட ஒரு தீ விபத்துக்குப்பின் கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.