பதிவு செய்த நாள்
15
டிச
2011
12:12
சபரிமலை : மண்டல பூஜை உற்சவத்தை ஒட்டி, சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ரத ஊர்வலம், வரும் 23ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும். வரும் 27ம் தேதி, தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை உற்சவம் நடந்து வருகிறது. இதில், சிறப்பம்சமாக, சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். இதற்கான தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து, வரும் 23ம் தேதி காலை 7 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக பம்பை நோக்கி புறப்படும். வழியில், ஓமலூர், கோன்னி, பெருநாடு ஆகிய இடங்களில் இரவு தங்கி, 26ம் தேதி பிற்பகல் பம்பை வந்தடையும். அங்கு மூன்று மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து அய்யப்ப சேவா சங்கத்தினர் தங்க அங்கியை ரதத்தில் இருந்து பேழைக்குள் வைத்து, சபரிமலை நோக்கி புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சரங்குத்தி சென்றடைவர். அங்கிருந்து அவர்களை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள், மேள தாளங்களுடன் வரவேற்று, சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வர். பதினெட்டாம்படி ஏறி சன்னிதியை அடைந்ததும், தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஆகியோர் தங்க அங்கியை பயபக்தியுடன் பெற்று, அய்யப்பனுக்கு அணிவிப்பர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். மறுநாள், 27ம் தேதியும் தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை உற்சவம் முடிவடைந்து, அன்றிரவு 11.45 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.