பதிவு செய்த நாள்
15
டிச
2011
12:12
மதுரை: மதுரையில் பிரம்மா குமாரிகள் பவள விழா காந்தி மியூசியத்தில் டிச., 16ல் முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. அதன் தமிழக, புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பீனா கூறியதாவது: ஆன்மிக தொண்டு நிறுவனம் பவள விழா கொண்டாடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. 400 உறுப்பினர்களுடன் 1936ல் துவங்கப்பட்டு, இன்று 137 நாடுகளில் பரவியுள்ளது. 9 லட்சம் உறுப்பினர்கள் சேவையாற்றுகின்றனர். இதன் பவள விழாவை செப்., 16ல் டில்லியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் துவக்கி வைத்தார். சென்னையில் நவ., 18ல் நடந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரையில் டிச., 16ல் பவள விழா துவங்குகிறது. துவக்க விழாவில் மதுரை ஆதீனம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். ராஜயோக அரங்கு, ஆரோக்கிய அரங்கு, பிரம்மா குமாரிகள் வித்தியாலயா சரித்திர அரங்கு, தியான அறைகள் கொண்ட அரங்கு திறக்கப்படுகிறது. அதை டிச., 18 வரை காலை 8 முதல் இரவு 8 மணி வரை இலவசமாக பார்வையிடலாம். டிச., 17ல் டாக்டர்களுக்கான பிரத்யோக கருத்தரங்கும், மாலையில் சமூக சேவையாளர்களுக்கான கருத்தரங்கும் நடக்கிறது. இதில் டாக்டர்கள், மாநில அமைச்சர் பங்கேற்கின்றனர். டிச., 18ல் கலை நிகழ்ச்சிகள், கூட்டு தியானம் நடக்கிறது. மாலையில் நடக்கும் நிறைவு விழாவில் ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன், மவுன்ட் அபு தவயோகினி நிர்மலா, மீடியா பிரிவு துணை தலைவர் கருணா பங்கேற்கின்றனர் என்றார்.