மனிதன் தான் செய்த பிழையை எண்ணி, இறைவனிடம் அழுது மன்னிப்புக் கேட்டால் அவர் புறக்கணிப்பது இல்லை. திருவாசகத்தில் மாணிக்கவாசகர், பல பாடல்களில் சிவனிடம் அழுது முறையிடுவதைக் காணலாம். நான் செய்த குற்றத்திற்காக வருந்தும் என்னை விட்டு விடாதே என்னும் பொருளில் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய் என்று உருகுகிறார். வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே என்றும், பெரியவர்கள் சிறுநாயின் பிழையைப் பொறுப்பது போல பொறுத்துக்கொள் என்னும் பொருளில்,பொறுப்பரன்றே பெரியோர்கள் சிறுநாய்கள் தம் பொய்யினையே என்றும் வருந்துகின்றார். இவ்விதம் பாடியதால், அழுது சிவனடி அடைந்த அன்பர் என்று பெயர் பெற்றார்.