குச்சனூரில் சனிப்பெயர்ச்சி: தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2017 01:12
சின்னமனூர்: தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் சனிப்பெயர்ச்சி பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுயம்பு மூலவரை தரிசித்தனர். குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் உள்ளது. சுரபி நதியின் மேற்கு கரையில் உள்ள இக்கோயில் மூலவர் ’அனுக்கிரக மூர்த்தியாக’ அருள்பாலிக்கிறார்.
சனிதிசை நடப்பவர்கள், சனிபார்வை உள்ளவர்கள் சுரபி நதியில் நீராடி, எள் விளக்கேற்றினால் உக்கிரப்பார்வை குறையும் என்பது ஐதீகம். இன்று(டிச.19ல்) காலை 9:59 மணிக்கு சனிபெயர்ச்சியானதையொட்டி மகாதீபம் ஏற்றி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அந்த தீபத்தை தரிசிக்கும் பக்தர்களின் சனிதோஷம் விலகி விடுவதாக ஐதீகம். சனிப் பெயர்ச்சியையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுயம்பு மூலவரை, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். சுரபி நதியில் நீராடிய பக்தர்கள் கொடிமரத்தை ஒட்டிய பீடத்தில் காகத்திற்கு அன்னமிட்டனர். நேர்த்திக்கடனாக பொரி, உப்பு படைத்தனர்.