உசிலம்பட்டி : மதுரை - தேனி மாவட்டங்களுக்கு இடையே செட்டியபட்டி கணவாய் மலை உள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத காலத்தில் பயணிகள் தங்கி செல்லும் வகையில், அப்பகுதி மக்கள் தண்ணீர் தொட்டி, உணவு வசதிகளை இலவசமாக செய்து தந்தனர். நாளடைவில் இந்த வழக்கம் மறைந்தது. இந்நிலையில் செட்டியபட்டியில் டீக்கடை நடத்தும் சுப்பிரமணி, 42, உடல் நலம் தேற ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதாக வேண்டிக்கொண்டார். உடல் நலம் தேறியவுடன் கணவாய் மலையடிவார விநாயகர் கோயில் பகுதியில் அன்னதானம் வழங்கியவர், எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர் கூறுகையில், ”மார்கழி முதல் ஐந்து நாட்கள் மட்டும் மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை மட்டும் சாம்பார், ரசத்துடன் சாப்பாடு வழங்குகிறேன். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையும் இதற்கு பயன்படுத்திக்கொள்கிறேன். விரதம் இருக்கும் காலத்தில் ஓட்டல்களில் சாப்பிட முடியாமல் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு இது வசதியாக உள்ளது,” என்றார்.