பதிவு செய்த நாள்
10
ஜன
2018
01:01
திருப்பூர் : ""உண்மையான பக்தனுக்கு துன்பம் நேர்ந்தால், ஒரு போதும் பெருமாள் பொறுமை காத்துக்கொண்டிருக்க மாட்டார், என, திருச்சி கல்யாணராமன் பேசினார். அவிநாசியில் நடந்து வரும் கம்பராமாயண சொற்பொழிவில், திருச்சி கல்யாண ராமன் நேற்று பேசியதாவது: கம்பராமாயணத்தில், பிரகலாதன் கதையை, ஆழமாக சென்று படிக்க வேண்டும். சீதையை கவர்ந்து வந்திருந்த ராவணனுக்கு, அவருடைய சகோதரனான விபீஷணன், பிரகலாதன் கதையை கூறி, நல்வழிப்படுத்த முயற்சித்தான். கடும் தவம் புரிந்த இரண்யன், இறைவனிடம் சாகா வரம் வேண்டுமென வரம் பெற்றான். வரம் பெற்ற பின், உலகையே ஆட்டிப் படைத்தான். அவனையும் ஆட்டுவிக்க, அவனது மகன் பிரகலாதன் தோன்றினான். நாராயணன் நாமத்தை கூறியே வளர்ந்த பிரகலாதன், தந்தையின் ஆட்டத் தை அடக்கினான். "நானே கடவுள் என்று கூறு என, தனது மகனை கொடுமைப்படுத்தினாலும், "நாராயணனே கடவுள் என்று பிரகலாதன் கூறினான். நாராயணன் நாமத்தை கூறி, ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டான்.
அதாவது, நாராயணன் நாமத்தை உள்ளப்பூர்வமாக கூறிக்கொண்டிருந்தால், உலகின் துன்பங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். "இறைவன் எங்கும் இறப்பான? என்று இரண்யன் கேட்க, "தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என, பிரகலாதன் கூற, அருகில் இருந்த தூணை உடைத்தான் இரண்யன்; உடனே அதில் இருந்து வெளிவந்த நரசிம்ம பெருமாள், இரண்யனை வதம் செய்தார். பெருமாள் நாமத்தை குறை கூறினாலோ, அவருக்கே துன்பம் செய்தால் கூட இறைவன் பொறுத்துக் கொள்வார். ஆனால், உண்மையான பக்தன் ஒருவருக்கு துன்பம் நேர்ந்தால், ஒரு போதும் பொறுமை காத்துக்கொண்டிருக்க மாட்டார். விபீஷணன் இக்கதையை கூறி, ராவணனை திருத்த முற்பட்டார். இவ்வாறு, அவர் பேசினார்.