பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் சுவாமி கோவில் திருத்தேர் வெள்ளோட்டம், மூன்று ஆண்டுகளுக்கு பின் வரும், 21ல், நடக்கிறது. நாமக்கல் நகரின் மத்தியில், சாளக்கிராம மலையின் மேற்குப்புறம், குடவரை கோவிலில், மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்ற பெயரில், இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாமக்கல் நகரின் நடுவில், 200 அடி உயரம் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், 7ம் நூற்றாண்டில், அதியேந்திர குணசீலன் என்ற பல்லவ மன்னரால் கட்டப்பட்டது என, கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவிலில், ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது, காலையில், நரசிம்மர், மாலையில், ஆஞ்சநேயர், ரங்க நாதர் எழுந்தருளிய தேர், பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும். இந்நிலையில், நரசிம்மர் திருத்தேர் பழுதடைந்ததால், கடந்த, மூன்று ஆண்டுகளாக இழுக்கப்படவில்லை. பின்னர், மிகுந்த பொருட்செலவில், திருத்தேர் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், வரும், 21ல், காலை, 11:00 மணிக்கு, தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தக்கார் வெங்கடேஷ், உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.