பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
குமாரபாளையம்: குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், குழந்தைகளின் கோலாட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. குமாரபாளையம், ஐயப்பன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் விழா கடந்த, 11ல், கூடாரவல்லி அம்மன் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, அரங்கநாதருக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் சுபமுகூர்த்தம் நடந்தது. அப்போது அரங்கநாதர், ஆண்டாள் நாச்சியார் ஆகியோரின் புகழ் பாடும் பக்தி பாடல்கள் பாடியவாறு, பெண் குழந்தைகள் கோலாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். திருக்கல்யாணம் செய்து கொண்ட சுவாமிகளை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளச்செய்து, பெண்கள் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். பின்னர் சுவாமிகளின் திருவீதி உலா செண்டை மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாக சென்ற. கல்யாண வைபவத்தை, நாமகிரிப்பேட்டை ரவிச்சந்திரன் சாஸ்திரிகள் நடத்தி வைத்தார். பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டன.