பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம், மல்லூரில் அமைந்துள்ள, குடைவரை கோவில் பாறையில், பாம்பணையில் ரங்கநாதர் அருள்பாலிக்கும் காட்சி, தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. சேலம் - நாமக்கல் சாலையில் உள்ள, மல்லூர் சுனைக்கரட்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, மலையில் உள்ள பாறையை குடைந்து, இரு குகை அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் உள்ள குகை பாறையில், தெற்கில் தலைவைத்தபடியும், வடக்கே திருவடிகளை நீட்டியபடி, ஆதிசேஷன் மீது ரங்கநாதர் சயனித்துள்ள காட்சி தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. அருகே மகாலட்சுமி, பிரம்மா, பரசுராமர் காட்சியளிக்கின்றனர். இடதுபுற குகையில், ஆழ்வார்கள், ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியுடன் வெங்கடேச பெருமாள் சிலை வடிவில், காட்சியளிக்கிறார். வெயில் காலத்திலும், குகை கோவில், குளிர்ச்சியாகவே உள்ளது. அருகே இருக்கும் பாலியில், வறட்சி காலத்திலும் நீர் வற்றாமல் உள்ளது. அதிலிருக்கும் தண்ணீர், கோவில் பகுதியில் பரவி, குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், குகைக்குள் நீர் கசிவு ஏற்படுவதில்லை. இங்கு, சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள், சொர்க்கவாசல் திறப்பு, புரட்டாசி மாதத்தில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த கரட்டில், கிழக்கே பெருமாள், மேற்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் வற்றாத சுனை நீர் ஊற்றுகள் அமைத்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.