பதிவு செய்த நாள்
19
பிப்
2018
12:02
காஞ்சிபுரம் : திருப்புட்குழி மரகத வல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று, தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி பகுதியில் விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், 108 திவ்விய தேசத்தில் ஒன்றாக இருக்கிறது. இக்கோவில் பிரம்மோற்சவம், 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவம் நடந்தது. இவ்விழாவில், பெருமாள் தினமும், காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.முக்கிய விழாவான தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, விஜயராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 8:15 மணிக்கு, தேரை, நிலையில் இருந்து பக்தர்கள் இழுத்து சென்றனர். காலை, 10:00 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.