பதிவு செய்த நாள்
23
பிப்
2018
12:02
ராமநாதபுரம், கச்சத்தீவில் ஆண்டு தோறும் அந்தோணியார் சர்ச் திருவிழா பிப்ரவரியில் நடக்கும். இதில் இலங்கை, தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கு பெறுவார்கள். கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. கச்சத்தீவு பகுதி இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு பகுதியில் அந்தோணியார் சர்ச் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இலங்கை, தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்று திரும்புவார்கள். முன் ஒரு காலத்தில் பண்ட மாற்று முறையில் இங்கிருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, இலங்கையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த நிலை மாறி ஆண்டு தோறும் கச்சத்தீவுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1,611 பேரும், மற்ற மாவட்டங்களில் இருந்து 3,136 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து 244 பேரும் செல்வதற்காக இலங்கை துாதரகம் அனுமதி வழங்கியது. இதில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு செய்தனர். இந்தாண்டு கச்சத்தீவு திருவிழா இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால். 2,100 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். நாட்டுப்படகில் செல்ல மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் கடலில் பயணம் செய்யும் போது ஏற்படும் கடல் சீற்றங்களால் பாதுகாப்பற்ற நிலை காணப்படும், என்பதால், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கேமரா மேன்களுக்கு கட்டுப்பாடு: பத்திரிகையாளர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் தான் ஆண்டு தோறும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கேமரா கொண்டு செல்பவர்கள் இலங்கை துாதரகத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். இந்தாண்டு, இது மட்டும் போதாது, இலங்கை உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும், என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது.