பதிவு செய்த நாள்
28
பிப்
2018
01:02
கோவை: கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதத்தில் நடைபெறும். கடந்த, பிப்., 13ல் பூச்சாட்டு உற்சவத்தோடு தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று இரவு 7:00 மணிக்கு கோனியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஓதுவார் கண்ணப்பனின் திருமுறை பாராயணத்தோடு பக்தர்கள் புடை சூழ அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ராஜவீதி தேர்நிலைத்திடலிலுள்ள, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளுவிக்கப்படுகிறார். மதியம் 2:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், ஆதீனங்கள், சிவாச்சாரியார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், கலெக்டர், மாவட்டவருவாய் அலுவலர், அறநிலையத்துறை இணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து வடம் பிடித்து இழுக்கப்படும் தேர், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர்வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை வந்தடைகிறது.போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்க போலீசார் அறிவிப்பு வெளியீடு செய்துள்ளனர். கோவையின் காவல் தெய்வத்துக்கு விழா நடைபெறுவதால், கோவை நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.