சிங்கம்புணரி சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. கோயிலின் மாசி மகத்திருவிழா பிப்.20 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள் நடக்கும் இத்திருவிழாவின் ஐந்தாம் நாளான பிப்.24 ம் தேதி ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 25 ம் தேதி இரவு கழுவன் திருவிழா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4:45 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வந்து 5:45 மணிக்கு நிலையை அடைந்தது. இன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.