பதிவு செய்த நாள்
01
மார்
2018
12:03
குமாரபாளையம்: குமாரபாளையம், கள்ளிப்பாளையம் காளியம்மன் கோவில்களில் நடந்த பூ மிதித்தல் வைபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். குமாரபாளையம் மற்றும் கள்ளிப்பாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா, பிப்., 13ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு பூ மிதித்தல் வைபவம் நடந்தது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. 24 மனை மாரியம்மன், முதலியார் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர். நாராயண நகர், கண்ணகி நகர், சமயபுரம், பண்ணாரி மாரியம்மன், காவேரி மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது. இன்று, தேரோட்டம் மற்றும் வண்டிவேடிக்கை நடைபெற உள்ளது.