சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜருக்கு நடந்த மாசி மாத மகா அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா மகா அபிஷேகம் உள்ளிட்ட ஆண்டுக்கு ஆறு மகா அபிஷேகம் நடக்கிறது. நடராஜருக்கு மாசி மாத மகா அபிஷேகம் நேற்று மாலை கனகசபையில் நடந்தது.இதனையொட்டி காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று காலை 11:00 மணிக்கு நடராஜர் சித்சபையில் இருந்து புறப்பட்டு கனகசபையில் நந்தி அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரங்கால் மண்டபம் முன் மகா ருத்ரா யாக பூஜை நடந்தது.மாலை 7:00 மணிக்கு கனகசபையில் சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.