பதிவு செய்த நாள்
01
மார்
2018
01:03
மாமல்லபுரம்: பாரம்பரிய வழிபாட்டிற்காக, பழங்குடி இருளர்கள், மாமல்லபுரத்தில் குவிந்தனர். மாமல்லபுரம், ஆன்மிக, சுற்றுலா தலமாக விளங்குவது ஒருபுறமிருக்க, பழங்குடி இருளர்களின், பாரம்பரிய கொண்டாட்ட இடமாகவும் உள்ளது. பழங்குடி இனத்தவரான இருளர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், வேலுார், ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் வசிக்கின்றனர். பாம்பு பிடிப்பது, விஷமுறிவு மருந்து தயாரிப்பது, விறகு சேகரிப்பது, இவர்களின் பரம்பரை தொழிலாக உள்ளது. செங்கல் சூளை, அரிசி ஆலை போன்ற இடங்களில், கூலி வேலையும் செய்கின்றனர். மாமல்லபுரம் கடற்கரையில், மாசி மக நாளில் கூடும் இவர்கள், குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு, பாரம்பரிய சடங்குகள் நிறைவேற்றுவர். இத்தகைய வழிபாட்டிற்காக, குடும்பத்தினர், உறவினர்களுடன், தற்போது குவிந்துள்ளனர். கடற்கரையில், சேலை தடுப்பாலான சிறு திடலில், சில நாட்கள் தங்கி, அங்கேயே சமைத்து உண்கின்றனர். நாளை காலை வழிபாடு நடத்த உள்ளனர்.