பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
12:04
சேலம்: எல்லைப்பிடாரியம்மன் குண்டம் திருவிழாவில், ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். சேலம், வின்சென்ட் பகுதியிலுள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடந்துவருகிறது. நேற்று அதிகாலை முதல், ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். பலர், ஆடு, கோழிகளை பலியிட்டு, வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து, பலர் அலகு குத்தி, கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். அதில், கிரேனில் தொங்கியபடி, முதுகில் அலகு குத்தி வந்த காட்சி, பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது. விழாக்குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை, குண்டம் திருவிழா நடக்கிறது, இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி, டவுன் பகுதியிலிருந்து, வின்சென்ட் வழியாக, அஸ்தம்பட்டி செல்லும் வாகனங்கள், மரவனேரி வழியாக, போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
* இளம்பிள்ளை ஏரிக்கரையிலுள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் பங்குனி தேரோட்ட விழா, கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, காளியம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் உற்சவம், தொடர்ந்து குண்டம் இறங்குதல் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை, தேரோட்டம், உருளுதண்டம், பொங்கல் வைத்தல், மாலை, வண்டி வேடிக்கை நடக்கவுள்ளது. அதேபோல், வேம்படிதாளம் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்குதல் நடந்தது.
* ஓமலூர், முதலாவது வார்டு, பழைய வண்டிப்பேட்டை காளியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, சக்தி கரகம், பொங்கல் வைத்தல், அக்னி கரகம், அலகு குத்துதல் ஆகியவை நடந்தது. அதேபோல், ஓமலூர், ஊமை மாரியம்மன் கோவிலில் சக்தி கரகம் அழைத்தல்; செல்லப்பிள்ளைக்குட்டை, தேவி ஜடை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா; மூக்கனூர், வைரன்காடு, முத்துமாரியம்மன் கோவில் சத்தாபரணம் ஆகியவை நடந்தது.
* வீரபாண்டி, பெரிய மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி, நேற்று, தீர்த்தக்குடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. அங்காளம்மன் கோவிலிலிருந்து, முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு, பால் மற்றும் தீர்த்தம் மூலம், அம்மனுக்கு அபி?ஷகம் செய்யப்பட்டு, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், அரியானூர், மகாசக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, கூழ்வார்த்தல், 108 பால்குட ஊர்வலத்துடன் சக்தி அழைத்தல் நடந்தது.