ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஓங்கி உயர்ந்த மருத மரங்கள் உட்பட பல்வேறு மரங்கள் அடர்ந்த இயற்கையான சூழலில் உள்ளது. மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் சுனை நீர் இக்கோயிலின் தனித்தன்மை. சுனை நீரில் குளித்து வேலப்பரை வழிபடுவதால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சித்திரை முதல் தேதி, அதனை தொடர்ந்து வரும் நான்கு வாரமும் குறிப்பிட்ட நாளில் விழா நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கோயில் வளாகத்தில் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வர். இக்கோயிலில் 2004ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதற்கான பணிகளை யார் துவக்குவது என்ற நிலை தற்போது உள்ளது. அலுவலர்கள் கூறியதாவது: கடந்த சில வாரத்திற்கு முன் தொல்லியல் துறையினர் கோயிலை பார்வையிட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து சர்வே செய்துள்ளனர். இந்த அறிக்கை கிடைத்தபின் அதற்கான குழு அமைத்து பணிகள் துவக்கப்படும், என்றனர்.