பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
12:04
ஆர்.கே.பேட்டை: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் திரவுபதியம்மன் தீமிதி திருவிழாவில், அக்னி பிரவேசம் நடந்தது. இதில், திரவுபதியம்மனடன், 1,008 பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். ஆர்.கே.பேட்டை, திரவபதியம்மன் தீமிதி திருவிழா நேற்று பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. முன்னதாக நேற்று முன்தினம், இரவு, 8:00 மணியளவில், திரவுபதியம்மன் அக்னி பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த 1,008 பக்தர்கள், தீர்த்தவாரியை முடிந்து, குளக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வீதியுலா வந்தனர். திரவுபதியம்மன், பஞ்ச பாண்டவர், கிருஷ்ணர் மற்றும் போத்து ராஜா உற்சவர்களுடன் நடந்த ஊர்வலத்தில், பேண்டு வாத்தியங்கள் மேள தாளங்கள் முழங்க, கோவிந்தா கோஷம் ஒலிக்க, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் திரண்ட வந்தனர். இரவு, 8:30 மணியளவில், கோவில் வளாகத்தில் மூடப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், திரவுபதியம்மனுடன் பக்தர்கள் இறங்கினர். இதில், குழந்தைகளை சுமந்தபடியும் அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கினர். இந்த வேண்டுதலை நிறைவேற்ற, ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதை தொடர்ந்து, நேற்று காலை, தர்மரானா பட்டாபிஷேகமும், இரவு, ஊர்வலமும் நடந்தது.