பதிவு செய்த நாள்
14
மே
2018
12:05
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, மட்டவளம் கிராமத்தில் அமைந்துள்ளது கோவத்ச நாதேஸ்வரர் கோவில். இங்கு, சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் பிரதோஷ விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. நேற்று மாலை, 4:30 மணிக்கு, பிரதோஷ அபிஷேகம் நடந்தது. நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, அருகம்புல், தாமரை மற்றும் பல்வேறு மலர்களால், அலங்கரிக்கப்பட்டார். அபிஷேகத்தின் போது, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார்கள், தேவார பாடல்களை பாடினர். அதை தொடர்ந்து, பிரதோஷ நாதர், உள்புறப்பாடு எழுந்தருளினார். இதே போல், வங்கனுார் விசாசேஸ்வரர், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாணசுந்தரேசனார், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில்களிலும், நேற்று மாலை, பிரதோஷ வழிபாடு நடந்தது.