பதிவு செய்த நாள்
14
மே
2018
12:05
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாட்டினை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, நேற்று மாலை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, சிவபெருமான் ரிஷப வாகனத்தில், உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பூங்கா நகர், சிவ - -விஷ்ணு கோவிலில் எழுந்தருளி உள்ள புஷ்பவனேஸ்வரர், பெரியகுப்பம், ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரர் கோவில், காக்களூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை பாதாள லிங்கேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை சிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
திருத்தணி: திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, பிரதோஷ விழாவையொட்டி, வடூக பைரவர், நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் சிவன் -- பார்வதி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தை, மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதே போல், திருத்தணி, நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதா சிவலிங்கேஸ்வரர், அகூர் திருவேட்டீஸ்வரர் கோவில்களில், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதே போல், நகரி டவுனில் அமைந்துள்ள கரகண்டீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாடு விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். - நமது நிருபர் -