சிருங்கேரிக்கு அருகில் உள்ள ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கருவறையில் எப்போதும் பொன்கவசம் அணிந்து காட்சியளிக்கும் இந்த அன்னையின் முன் ஆற்றல் வாய்ந்த ஸ்ரீசக்கரம் உள்ளது. அன்னையின் கருவறையின் வெளிப்புறம் சன்னதியைச் சுற்றி அணைத்தது போல் பிரமாண்டமாக ஒரு நீண்ட நாகத்தின் உருவம், வெகு அற்புதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் அற்புத சக்தியின் அடையாளமாக இந்த நாகம் கருதப்படுகிறது. இங்கே எப்போதும் சமைக்காத தானியங்களே அன்னைக்கு நிவேதனமாக சமர்ப்பிக்கப்படுகின்றன. சுற்றியுள்ள ஊர்களில் அறுவடை முடிந்ததும் முதல்படி தானியம் அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. அப்புறம்தான் வயிற்றுக்கோ, விற்பனைக்கோ! இங்கே நாள் முழுவதும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.